கீழக்கரை,அக்.25:-
கீழக்கரை புது கிழக்கு தெருவை சேர்ந்த வக்கீல் நாதியா முகமது ஹனிபாவிற்கு சொந்தமான வீட்டின் மேல் செல்போன் டவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.அப்போது அந்தப் பகுதி கவுன்சிலர் கட்டிட உரிமையாளரை தொடர்பு கொண்டு செல்போன் டவர் கட்டுவதாக இருந்தால் எங்கள் 3 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பணிகள் துவங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு கட்டிட உரிமையாளர் அனைத்து அனுமதியும் பெற்று தான் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சித்திக், நிஷா பவுண்டேஷன் சேர்மன் அபுபக்கர் சித்தீக் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜகுபர் சாதிக் மற்றும் பலருடன் சேர்ந்து செல்போன் டவர் கட்டும் பணிகள் நடக்கும் கட்டிடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டு செல்போன் டவர் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தி அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயமானது தெரியவந்தது.இதுகுறித்து கட்டிட உரிமையாளர் வக்கீல் நாதியா முகமது ஹனிபா கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
