
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் அவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் வரவேற்றார்.விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கிருபாகரன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து பாராட்டு விழா நடத்தப்பட்டது.ஹெல்மெட் அணியும் சட்டம், மருத்துவக்கல்லூரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம்,ஆடு மாடுகள் எங்கு சென்றோம் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு தடை செய்யக்கூடாது போன்ற சட்டங்கள் இயற்றிய முன்னாள் நீதியரசரை பாராட்டி பலரும் பேசினர்.

முன்னாள் நீதிபதி கிருபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்துவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பொதுவாக கலைஞர்கள் போன்றவர்களை தான் பாராட்டுவார்கள்.இங்கு நீதிபதியை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி.கால்நடை மேய்ச்சல் புறம்போக்கு நிலம் முன்பு இருந்தது. அது தற்போது ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது அதை மீட்டு மேய்ச்சல் புறம்போக்கு நிலமாக கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக கால்நடை பாதுகாப்பு, கால்நடை நம்பி இருக்கும் மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு நலச் சங்கம் வைத்துள்ள கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று பரிந்துரை செய்ய வேண்டும்.கால்நடை வளர்ப்போருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். காட்டில் மேயும் ஆடு,மாடுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் நீதியரசர் கூறினார்.
முன்னதாக பாராட்டு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன்,ஸ்ரீமதி,புகழேந்தி ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.விழாவில் விஜய் டிவி புகழ் நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது.தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
