இராமநாதபுரம்,மே.13:-

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் ஆட்சியர்/மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதீப்குமார்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் ஆகியோர்,கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள் .

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 1314 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 887 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79,416 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில்,இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் ஆட்சியர்/மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதீப்குமார்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் நேரடியாகச் சென்று, மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்கிட ஏதுவாக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1500 படுக்கைகளும்,4 தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி,அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி,பரமக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி,அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 425 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும்,குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 320 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 87 நபர்கள் ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 600 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.11 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1200 முதல் 1400 லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் உட்பட உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.கொரோனா சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மூன்று வேளை சத்தான உணவு,கபசுர குடிநீர், எழுமிச்சை பழச்சாறு,வேர்கடலை/ கொண்டக்கடலை/பாசிப்பயிறு போன்ற உணவு பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.சிகிச்சை பெறுவோருக்கு சத்தான உணவு தரமான முறையில் போதிய அளவு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என கூடுதல் ஆட்சியர்/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதீப்குமார்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்,இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அல்லி,முதன்மை மருத்துவர் மலையரசு உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *